கோவை-திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
வேகத்தடைகள் ஏற்கனவே பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து இறந்தனர்.இதனால் மேம்பாலம் தற்காலிகமாக முடப்பட்டு விபத்தை தடுப்பதற்கான பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால்,வேகத்தடைகள் அமைக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே மீண்டும் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார். தொடர்ந்து 3 பேர் பலியானதால், மேம்பாலத்தின் இரு புறங்களிலும் இரும்பு பென்சிங் (தடுப்புகள்) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் 2 கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்றது.
அந்த கார்கள் மேம்பாலத்தில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்றபோது அங்கிருந்த வேகத்தடைகளை 2 கார் டிரைவர்களும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் திடீரென பிரேக் பிடித்ததில் 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. இதில் காரில் பயணித்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து திருச்சி சாலை மேம்பாலத்தில் 4 விபத்துகள் எற்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.