கோவையில் 7 மாத கர்ப்பத்ததால் விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவி- காதலன் போக்ஸோவில் கைது..!

கோவை வடவள்ளியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் விஷத்தை குடித்தார். பின்னர் தான் விஷம் குடித்து விட்டதாக அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருந்தது
தெரியவந்தது.
இதுகுறித்து டாக்டர்கள் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கூலி தொழிலாளி கோகுலகிருஷ்ணன் (22) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர். அப்போது கோகுலகிருஷ்ணன் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில்
சிறுமியை அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில்
சிறுமி 7 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இது ஆரம்பத்தில் சிறுமிக்கு தெரியவில்லை. நாளடைவில் தெரியவந்ததும் சிறுமி பயத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி விஷத்தை குடித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். அப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து வடவள்ளி போலீசார் பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய கோகுல கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.