துப்பாக்கி சூடு நடத்திய அதே இடத்தில் பேரணியை மீண்டும் துவக்குகிறார் இம்ரான் கான்..!!

லாகூர் : ”பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், என் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட அதே இடத்தில் இருந்து, பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் பேரணி நாளை முதல் மீண்டும் துவங்கும்,” என, இம்ரான் கான் தெரிவித்தார்.பாகிஸ்தானில் ஆளும் கட்சியை எதிர்த்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பிரமாண்ட பேரணி நடத்தினார். இந்த பேரணி பஞ்சாப் மாகாணத்தின் வாசீராபாத் என்ற இடத்தை அடைந்தபோது, ஒரு நபர் கண்மூடித்தனமாக சுட்டதில், இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து பேரணி ரத்து செய்யப்பட்டது.லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இம்ரான் கானின் காலில் அறுவை சிகிச்சை செய்து குண்டுகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.அப்போது இம்ரான் கான் கூறியதாவது: என் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வாசீராபாத்தில் இருந்து நாளை முதல் பேரணி மீண்டும் துவங்கும். மருத்துவமனையில் இருந்தபடி நான் உரையாற்றுவேன்.

பேரணியின் வேகத்தை பொறுத்து, 10 – 15 நாட்களில் ராவல்பிண்டியை அடையும். அங்கிருந்து நான் இணைந்து கொண்டு, பேரணியை வழிநடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் இன்னும் வழக்கு பதியாதது குறித்து, இம்ரானின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அவாமி முஸ்லிம் லீக் கேள்வி எழுப்பியது.இதற்கு பதில் அளித்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ”பஞ்சாப் மாகாணத்தில், இம்ரானின் கட்சி தான் ஆட்சியில் உள்ளது. இது குறித்து மாநில அரசு தான் பதில் அளிக்க வேண்டும்,” என்றார்.