தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம்: பல்கலைகலக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை..!

சென்னை: தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் தொடர்பாக தனியார் பல்கலை.களின் துணைவேந்தர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார்.

தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி, மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதற்கிடையே உயர்கல்வி வளர்ச்சி குறித்து ஆளுநர் ரவி, பல்கலை. துணைவேந்தர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் மாநில பல்கலை.களின்துணைவேந்தர்களுடன் உதகையில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தேசிய கல்விக்கொள்கை, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற அம்சங்கள் குறித்து ஆளுநர் ரவி கலந்துரையாடினார்.

அதன் தொடர்ச்சியாக, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இதில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தனியார் பல்கலை.களின் துணைவேந்தர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்கலை.களில் தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை பல்கலைக்கழகங்கள் விரைவாக நடைமுறைப்படுத்தி, ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மறுபுறம் தேசிய கல்விகொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்துக்கென தனிக்கொள்கையை தமிழக அரசு வடிவமைத்து வருகிறது. எனினும்,தொடர்ச்சியாக பல்கலை. துணைவேந்தர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.