அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்… பள்ளிகள் திறப்பில் மாற்றமா..? இன்று வெளியாகும் அறிவிப்பு- அன்பில் மகேஸ் பேட்டி.!!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் ஒன்றாம் தேதியா அல்லது ஐந்தாம் தேதியா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசியதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்..

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான இணைய வழிக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

திருச்சியில் இருந்து இணைய வழியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் – அரசுப்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும்,பள்ளித் தூய்மை,
விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது, தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும், என்பன போன்ற கருத்துகளை அமைச்சர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம்
வலியுறுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்
பொய்யாமொழி தெரிவித்ததாவது..

மாலை 5 மணி அளவில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இணையவழி சந்திப்பு வாயிலாக பள்ளிகள் திறப்பு குறித்து விளக்கங்களை கேட்டு அறிந்தேன்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகளை ஒன்றாம் தேதி திறக்கலாமா அல்லது ஐந்தாம் தேதி திறக்கலாமா என்கிற விவரங்களை தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கரூர் போன்ற மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். இது குறித்து ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சரிடம் விவரங்களை கூற உள்ளேன். பள்ளிகள் திறப்பு எப்போது என்கிற அறிவிப்பு கண்டிப்பாக இன்று  வெளியிடப்படும்’ என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.