அப்பாவை போல.. தீவிர அரசியலில் குதித்தார் முன்னாள் முதல்வரின் மகன்..!

ஸ்ரீநகர்-வாரிசு அரசியலுக்கு புகழ்பெற்ற ஜம்மு – காஷ்மீரில், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாதின் மகன் சதாம் நபி ஆசாதும் தீவிர அரசியலில் குதித்துள்ளார்.
காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற தனிக் கட்சியை துவக்கினார். தொழிலதிபரான அவரது மகன் சதாம் நபி ஆசாத், ௪௧, தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் நடந்த கட்சியின் இளைஞர் மாநாட்டில் அவர் பங்கேற்றார். ஆனால், அதில் அவர் பேசவில்லை. தன் மகன் அரசியலில் களமிறங்கியுள்ளது குறித்து குலாம் நபி ஆசாத், சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். சதாம் நபி ஆசாதுக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என, கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். ஜம்மு – காஷ்மீரில் வாரிசு அரசியல் என்பது மிகவும் பிரபலம். தேசிய மாநாட்டு கட்சியில் பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் முப்தி முகமது சையதின் மகள் மெஹபூபா முப்தி ஆகியோர் முதல்வர்களாக இருந்துள்ளனர். பிரிவினைவாத தலைவர் அப்துல் கனி லோனின் மகன் சாஜத் லோன், முன்னாள் மத்திய அமைச்சர் சைபுதின் சோஸ் மகன் சல்மான் அனீஸ் சோஸ் போன்றோரும் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.