தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 10.05.2026 பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா, பிரபு உள்ளிட்ட தவெக எம்.எல்.ஏக்கள் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதனையடுத்து முதலமைச்சர் விஜய் தன்னுடைய அலுவல் பணிகளை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் பேருந்து நிலையங்கள், கோயில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகிலுள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மேற்கண்ட இடங்களைச் சுற்றி சுமார் 500 மீட்டருக்குள் உள்ள சுமார் 200 முதல் 500 டாஸ்மாக் கடைகள் வரை முடப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.அதோடு ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என புகார்கள் எழுந்துள்ள கடைகளும் முட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ‘போதைப் பொருள் ஒழிப்பு, சட்ட ஒழுங்கு பிரச்சினையை தீர்த்தல், பெண்கள் பாதுகாப்புக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கும்’ என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





