தொடர்ந்து 3 நாட்கள் விடுப்பு எடுத்தால் உடனே ஆய்வு… இடைநிற்றல் தடுக்க அதிரடி..!

கோவை: அடுத்த கல்வியாண்டில், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கும் மேல், மாணவர்கள் விடுப்பு எடுத்தால், ஆய்வு செய்வதோடு, உரிய காரணத்தை ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுக்கு பின், கடந்த கல்வியாண்டில் (2022-23) தான், பள்ளிகள் முழுவீச்சில் செயல்பட்டன.

ஆனால், மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது, மிகப்பெரிய சவாலாக இருந்தது. தொடர்ச்சியாக பள்ளிக்கு வராத மாணவர்களை, வீட்டுக்கே நேரில் சென்று ஆசிரியர்கள் பள்ளிக்கு அழைத்து வந்தனர். இருப்பினும் வருகைப்பதிவு சதவீதம் குறைவாக தான் இருந்தது. பொதுத்தேர்வுக்கு கூட, மாணவர்கள் வராதது, பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.கோவை மாவட்டத்தில் மட்டும், பிளஸ் 1, பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வுகளில், 1,600க்கும் மேற்பட்டோரும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 800க்கும் மேற்பட்ட மாணவர்களும், பங்கேற்கவில்லை.

அரசுப்பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலும், வருகைப்பதிவு சதவீதம் குறைவு தான். எட்டாம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ நடைமுறை இருப்பதால், வருகைப்பதிவை காரணம் காட்டி தோல்வியடைய செய்ய முடியாத நிலை உள்ளது. இது தொடர்ந்தால் கல்வித்தரம் சரியும் என்ற கருத்து எழுந்துள்ளது.இதனால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு மேல், பள்ளிக்கு வராத குழந்தைகளின் நிலை ஆய்வு செய்து, அதற்கான காரணத்தை, ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

அடிக்கடி விடுப்பு எடுப்போரின் பட்டியலை, மாவட்ட அளவிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டுமென தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘இடைநிற்றல் குழந்தைகளின் நிலையை கண்டறிய, பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில், பிரத்யேக குழு உள்ளது. பள்ளி அளவிலான குழுவில், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மட்டுமே உள்ளனர். வட்டார, மாவட்ட அளவிலான குழுவிடம், தொடர்ச்சியாக விடுப்பு எடுப்போர் பட்டியல் வழங்கப்படும். இனி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுப்பணி தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதோடு, இறுதிகட்ட பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, அடுத்த வாரத்தில் துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர்.