மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி… 4 போலீசார் சஸ்பெண்ட்.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு..!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த் 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேட்டைச் சேர்ந்த 6 பேர் அப்பகுதியில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி குடித்துள்ளனர். சாராயம் குடித்துவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்ற இந்த 6 பேரும் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து எக்கியர்குப்பம் மீனவ கிராமத்திற்கு மரக்காணம் போலீசார் விரைந்தனர். அப்போது கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு மயக்க நிலையில் வாந்தி எடுத்த தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகைவாசன், ரமேஷ், ராஜமூர்த்தி ஆகிய 6 பேரை மீட்ட போலீசார், போலீஸ் வாகனத்திலேயே மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் உடல்நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலக்குறைவால் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், தரணிவேல் ஆகியோர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மீதமுள்ள 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை டி.ஐ.ஜி பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் எக்கியார்குப்பம் கிராமத்திற்கு விரைந்தனர். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு மரக்காணம் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து எஸ்.பி ஸ்ரீநாதா எக்கியர்குப்பம் மீனவர் பகுதிக்கு வந்து கள்ளச்சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இச்சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அமரன் (25) என்பவர் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை விற்றதும், அவரிடமிருந்து வாங்கி குடித்தவர்கள் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மரக்காணம் போலீசார் விரைந்து சென்று அமரனை கைது செய்தனர். மேலும், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வரும் 10க்கும் மேற்பட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு கலால் காவல்துறை காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்..