நான் கிரிக்கெட் பார்க்க மாட்டேன்.. அவர் யாருன்னு தெரியல.. ரிஷப் பண்ட் உயிரோடு இருக்க காரணமான பஸ் டிரைவர் பேட்டி..!

ரிஷப் பண்ட் யார் என்பதே எனக்கு தெரியாது, நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. சுற்றி இருப்பவர்கள் சொல்லித்தான் தெரியும் எனக்கு’ என்று அவரை காப்பாற்றிய பஸ் டிரைவர் சுஷில் குமார் பேட்டியளித்துள்ளார்.

அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியில் இருந்து டேராடூன் அருகேயுள்ள தனது சொந்த ஊருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே ஆரம்பகட்ட சிகிச்சைகள் செய்து முடித்த பிறகு, டேராடூனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு முழுமையாக ஸ்கேன் செய்து பார்த்ததில் பல இடங்களில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் ரிஷப் பண்ட் யார் என்பது எனக்கு தெரியாது என விபத்தில் இருந்து ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் சுஷில் குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:

நான் தினமும் இந்த வழியாக தான் பேருந்து ஓட்டுகிறேன். எப்போதும்போல ஹரித்வாரில் இருந்து காலை 4.25க்கு துவங்கி இந்த வழியாக வந்துகொண்டிருந்தேன். காலை 5.10 மணியளவில் வழியில் அதிவேகமாக வந்த கார் நிலைதடுமாறி நடுவில் இருந்த தடுப்பை உடைத்து, எதிர்திசையில் வாகனங்கள் வரும் ரோட்டிற்கு (டெல்லி நோக்கி செல்லும் ரோடு) சென்று கவிழ்ந்தது.

பஸ்ஸை நிறுத்திவிட்டு நானும் நடத்துனரும் விபத்தான வண்டி நோக்கி ஓடினோம். கார் அப்போது தான் தீ பிடிக்கும் நிலையில் இருந்தது. அவரை காப்பாற்றிவிட்டு ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்யலாம் என முடிவெடுத்தோம். எங்கள் இருவரால் கதவை திறக்க முடியவில்லை. அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தோம். அவரை வெளியே எடுத்து பாதுகாப்பாக உக்கார வைத்த அடுத்த நிமிடமே கார் தீப்பிடித்து எரியத் துவங்கியது.

நான் தான் ரிஷப் பண்ட் என கூறினார். எனக்கு கிரிக்கெட் பற்றி பெரிதாக தெரியாது என்பதால் யார் என்று அப்போது தெரியவில்லை. என்னுடைய நடத்துனர் மற்றும் அருகில் இருந்தவர்கள் தான் அவர் இந்திய நாட்டிற்க்காக விளையாடும் கிரிக்கெட் வீரர் என்று கூறினார்கள்.

பின்னர், அவரது அம்மாவின் நம்பர் கொடுத்து பேசச்சொன்னார். அந்த நம்பர் ஸ்விட்ச்-ஆப் இல் இருந்தது. தாமதிக்காமல் ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்தேன். அடுத்த 15 நிமிடத்தில் வந்துவிட்டார்கள். நடுவில் அவரிடம் நன்றாக இருக்கிறீங்களா? மயக்கம் வருதா? என கேட்டேன். எனக்கு ஒன்றும் இல்லை என கூறினார். தண்ணீர் மட்டும் குடிக்க கொடுத்தோம். பின்னர் ஆம்புலன்ஸ் இல் அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். நன்றாக இருக்கிறார் என்பதை செய்தியை பார்த்து தெரிந்துகொண்டேன். மகழ்ச்சியாக இருக்கிறது.’ என கள்ளம்கபடம் இல்லாமல் பேசினார்.