விஜய் கட்சியில் ‘திராவிடம்’ இல்லாததே மகிழ்ச்சி தான் – சீமான் பேட்டி.!!

விஜய்யின் கட்சி பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல் தான். அதனை நான் வரவேற்கிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் புதிதாக தொடங்க இருக்கும் கட்சியின் பெயரை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லி சென்றிருந்தார்.

இந்த நிலையில், ‘தமிழக வெற்றி கழகம்’ என்று தனது கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளார். மேலும் கட்சி தொடங்குவதன் நோக்கம், எப்போது முதல் முழுநேர அரசியலில் ஈடுபடுவது என்பது குறித்து விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது கட்சி தொண்டர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  அளித்த பேட்டியில், “தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் நன்றாக உள்ளது. கட்சி பெயரில் திராவிடம் என்ற பெயர் இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே பெரிய மாறுதல் தான். அதனை நான் வரவேற்கிறேன்.

கழகம் என்பது திமுக, அதிமுகவிற்கு மட்டும் சொந்தமானது இல்லை. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை விஜய் மக்கள் கழகம் என்று மாற்றி கட்சி பெயராக அறிவிக்கலாமே என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கூறியிருந்தேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் சமத்துவ குரலை கோட்பாடாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி” என்று சீமான் பேசினார்.