புதிய அரசியல் கட்சி தொடங்கிய விஜய்க்கு உதயநிதி வாழ்த்து.!!

டிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார்.

தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என விஜய் பெயரிட்டுள்ளார். கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் முழுமையாக உதவ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம், அவருக்கு பலரும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, “ஜனநாயக நாட்டில் யார் அரசியல் இயக்கம் துவங்க அனைவருக்கும் உரிமை உண்டு. நடிகர் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டு தெரிவிப்போம். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்.” என்றார்.

தற்போது அமைச்சராக உள்ள உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் காலத்துக்கு பின்னர் தமிழக அரசியலில் முக்கியமான சக்தியாக உருவெடுக்கவுள்ளார். எனவே, விஜய்யின் அரசியல் வருகையை தொடக்கத்தில் இருந்தே தனக்கு பின்னடைவாகவே அவர் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, விஜய்யின் அரசியல் வருகையை ஆரம்பத்திலேயே தடுத்து விட வேண்டும் என்பதால், அவருக்கு சினிமாத்துறையில் பல்வேறு அழுத்தங்களை உதயநிதி கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே, உதயநிதிக்கு நேரடிப் போட்டியாகவே அரசியல் களம் காண விஜய் விரும்பியதாகவும் கூறப்பட்டது.

அதற்கு ஏற்றாற்போல், நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். இதனை உதயநிதி வரவேற்றுள்ளார். எதிர்கால தமிழக அரசியல் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.