மார்ச்24ல் மனித சங்கிலி போராட்டம் – ஜாக்டோ-ஜியோ அதிரடி அறிவிப்பு..!

மிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கலி போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மெல்கிராஜாசிங், ஷேக்கபூர், ராஜாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள் ஆர்.கணேசன், ம.லோகையா, ஆர்.குப்புசாமி, மு.ஜம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் சிறப்பு விருந்திரனராக கலந்து கொண்டு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்பொழுது பேசிய அவர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீத பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மட்டும் பணியமர்த்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது வலியுறுத்தினர். வரும் மார்ச் 24ம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்து மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றும் அந்தப் போராட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.