அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி – பிரதமர் மோடி ட்வீட்.!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று மாலை 5.30 மணிக்கு உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் உரையாற்றவில்லை..

மாறாக அவர், ட்வீட் மட்டும் பதிவிட்டுள்ளார். அதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி ஐந்து ரக ஏவுகணை திவ்யாஸ்திரா சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

2024 லோக்சபா தேர்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், அதுபற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த சூழலில் தேர்தல் கூட்டணி மற்றும் பேச்சுவார்த்தையில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பிற மாநிலக்கட்சிகள் மும்முரமாக உள்ளன.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அண்மையில் பயணிகள் ரயில் கட்டணத்தை குறைத்து மத்திய அரசு அறிவித்தது.

2020-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காலம் தொடங்குவதற்கு முன் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் ஆக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு தொடங்கிய போது 200 கிலோ மீட்டருக்குக் குறைவான தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டது . பயணிகள் ரயில்களில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு 30 ரூபாயாக்கப்பட்டது.

கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பிய போது குறைக்கப்படாத கட்டணம், கடந்த பிப்ரவரி 27ம் தேதி குறைக்கப்பட்டது. பயணிகள் ரயில்களில் கொரோனா காலத்துக்கு முன்பிருந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த முறை உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் ரயில்வே கடந்த மாத இறுதியில் அதிரடியாக அறிவித்தது.

அடுத்ததாக மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 8ம் தேதி வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கடந்த மார்ச் 9ம் தேதி அதாவது அறிவித்த மறுநாளே 100 ரூபாய் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

அடுத்த அதிரடியாக வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஊதிய உயர்வு மற்றும் வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அந்தவகையில் வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு வழங்கி மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும் வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியிட போவத்தாகவும் கூறியது.

இந்நிலையில பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாக இன்று மாலை தகவல்கள் வெளியாகின. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இதேபோல் டிவியில் தோன்றிய பேசிய மோடி, 500 ரூபாய் ,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தார். அதன்பிறகு பிரதமர் மோடி கொரோனா காலத்தில் லாக்டவுடன் அறிவிப்பிற்காக டிவியில் தோன்றினார். அதன்பிறகு நாட்டு மக்களிடம் பேச உள்ளதாக அறிவிப்பு வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே தோன்றி உரையாற்றவில்லை.. அவர் ட்வீட் மட்டும் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை குறித்தாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டில் “உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலக்குகளை தன்னிச்சையாக குறி வைக்கக்கூடிய தரம் உயர்த்தப்பட்ட அக்னி ஐந்து ரக ஏவுகணை திவ்யாஸ்திரா சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது” என கூறியுள்ளார்.