அனைவருக்கும் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!!

அனைவருக்கும் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக  விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்…

விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் பிறந்த நாளாக  வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. முழு முதற் கடவுளை விநாயகர், கணபதி, ஆனைமுகன், பிள்ளையார் என பல பெயர்களால் அழைக்கிறோம். .

விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 19 ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாட ஏற்றதாக அமைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மேலும் சிறப்பான விழாவாக விநாயகரின் அவதார திருநாள் அமைந்துள்ளது. அதுவும் புரட்டாசி மாதத்தில் வருவதால் ஆன்மிக அன்பர்கள் அதிக உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தயாராகி வருகின்றனர். நாமும் மற்றவர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறி இந்த நாளை சிறப்பானதாக கொண்டாடுவோம்.முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். விநாயகப் பெருமான் அறிவு, ஞானம், செல்வ வளம், அதிர்ஷ்டம் ஆகியவற்றை தரும் கடவுளாக வணங்கப்படுகிறார். விநாயகருக்கு வாழை இலையில்  இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் படைத்து வழிபடலாம்.

விநாயகரின் பிறந்த நாளை உலகம் முழுக்க வாழும் இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகின்றனர். ஞானத்தின் அடையாளமாகவும் மகிழ்ச்சி, செல்வச் செழிப்பை அருள்பவராகவும் விநாயகர் பார்க்கப்படுகிறார்.

விநாயகர் சதுர்த்தி என்பது பெரும்பாலும்  வட மாநிலங்களில் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி என்று தொடங்கும் விழா 10 நாட்கள் வரை நடைபெறும். இந்த நாட்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

இந்து மத புராணங்கள் படி, பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது நந்தி தேவரைக் காவலுக்கு வைத்துவிட்டு சென்றார். சிவன் வந்ததால் அவரை நந்தி தேவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால், அடுத்த முறை நந்தி தேவரைக் காவலுக்கு வைக்காமல் தன் உடலிலிருந்த சந்தனத்தை (சிலர் மஞ்சள் என்றும் கூறுவர்) உருட்டி குழந்தையை உருவாக்கி, காவல் காக்கும்படி கூறி சென்றார்.

அப்போது சிவன் வரவே அவரை யார் என்று தெரியாத விநாயகர் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் அந்த குழந்தையின் தலையை வெட்டி வீழ்த்திவிட்டார். இதற்குள் குளித்து முடித்து வந்த பார்வதி தேவி, தன் மகனுக்கு ஏற்பட்ட கதியைக் கண்டு கோபம் கொண்டார். நடந்ததை அறிந்து காளியாக மாறினார்.

பார்வதி தேவியின் மனம் வருந்துவதை உணர்ந்த சிவபெருமான், தலை வெட்டப்பட்ட குழந்தைக்கு உயிர் கொடுப்பதாகக் கூறினார். வடக்கு புறமாக தன்னுடைய கனங்களை அனுப்பி முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து வரச் செய்தார். அப்படிச் சென்றவர்கள் கொண்டு வந்தது யானையின் தலையைத்தான். அதை வைத்து குழந்தைக்கு உயிர் கொடுத்தார் சிவபெருமான். இதுவே யானை முகம் கொண்ட விநாயகரின் புராணங்கள் சொல்லும் வரலாற்றுக் கதையாகும்.

விநாயகர் சதுர்த்தியான இன்று  நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக  விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை பகிர்ந்து, அனைவரும் விநாயகரின் அருளை பெற செய்யலாம்..