இன்று விநாயகர் சதுர்த்தி விழா- கோவையில் 4,500 போலீசார் பாதுகாப்பு..!

கோவை;விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும், 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்பட உள்ளது.
சிலை ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், கோவை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.தவிர, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மேன்ஷன் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு போன்ற தங்கும் இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவை மாநகரில் 676, புறநகரில் 1,611 சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக புறநகரில், 2,500 போலீசார், மாநகரில் 2,000ம் என, மொத்தம் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலைகளை விசர்ஜனம் செய்ய, 16 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது.அப்பகுதிகளில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, விசர்ஜனம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.