ஆளுநர் விவகாரம் : விதிகளை தளர்த்த சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்..!

சென்னை: ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தனித் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.10) நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக அரசு சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதன்படி, ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார். சட்டப்பேரவை விதிகளில் உள்ள ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்தி வைப்பது தொடர்பாக தீர்மானம் பேரவையில் கொண்டு வரப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு, அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரவையின் கதவுகள் மூடப்பட்டு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அவையில் இருந்த 146 உறுப்பினர்களில் 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். பாஜக உறுப்பினர்கள் 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.