அரசு மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை கடத்திய பெண் கைது : 24 மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள் ..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் திவ்யபாரதி மற்றும் யூனிஸ் ஆகியோர்களுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 29-ந் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று 3-ந்தேதி அதிகாலை சுமார் 5மணிக்கு மருத்துவமனையில் இருந்து அவர்களது பச்சிளம் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. உடனே அவர்கள் அங்கிருந்த புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததனர். அதன்பேரில் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த போலீஸ்சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கடத்தபட்ட குழந்தையை உடனடியாக பத்திரமாக மீட்கும் பொருட்டு, மதுவிலக்கு அமலாக்க துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில்12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரப் புலன் விசாரணை மேற்கொண்டனர்.அரசு மருத்துவமனையில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படாத நிலையில், காவல்துறையினர் மருத்துவமனைக்கு வெளியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், பின்னர் அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து கோயம்புத்தூர் வரை உள்ள கிட்டத்தட்ட 150 சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
மேலும் கோயம்புத்தூரில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், குழந்தையை கடத்திச் சென்ற நபர்களை அடையாளம் காணப்பட்டது. உடனடியாக பாலக்காட்டிற்கு தனிப்படை காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையை கடத்திய கேரள மாநிலம், குரங்கோடு, கொடுவாயூர் பகுதியைச் சேர்ந்த ஜெமினா (வயது 34) மற்றும் மற்றொரு நபர் ஆகிய இருவரையும் கைது செய்து செய்தனர். பின்னர் ஜெமினா-வை விசாரணை செய்ததில், அவர் தன் கணவரிடம் இருந்து பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், இந்நிலையில் மணிகண்டன் தனக்கும் வாரிசாக ஒரு குழந்தை வேண்டுமென்று கேட்டதன் பேரில் ஜெமினா தான் கர்ப்பமாக இருப்பது போல் போலியாக நடித்து வந்தவர், தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக மணிகண்டனிடம் பொய்யாக கூறியுள்ளார். பின்னர் மணிகண்டனிடம் பிறந்த குழந்தையை காட்ட வேண்டும் என்பதற்காக இந்தக் குழந்தையை கடத்திச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் அவர்களிடமிருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்தனர்.இவ்வழக்கில் 22 நேரத்திற்குள் கிட்டத்தட்ட 150 சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட தனிப்படை காவல்துறையினரை* மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர,, கோவை சரக காவல்துறை துணை தலைவர் ,டாக்டர். முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர்கள் வெகுவாக பாராட்டினார்கள்