விடுதியில் பதுக்கி வைத்து இருந்த கஞ்சா: 2 மாணவர்கள் கைது-கோவை கல்லூரியில் போலீசார் அதிரடி..!

கோவை சூலூர் பகுதியில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிகளில் உள்ள விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கி படித்து வருகின்றனர்.

தற்போது கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சூலூர் போலீசாருக்கு நீலாம்பூர் அண்ணா நகரில் சில கல்லூரி மாணவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். சோதனையில் அங்கு இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதனை பதுக்கி வைத்து இருந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கிரண்தாஸ் (வயது 21), அருள் கிருஷ்ணன் (21), ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.