ஏசி ரூமில் கஞ்சா தோட்டம்… யூடியூப் பார்த்து கஞ்சா வளர்த்த 4 இளைஞர்கள் – சிக்கியது எப்படி..?

சென்னை தாம்பரம் சேலையூர் காவல் நிலையம் அருகே வீட்டில் வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்த நான்கு பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். தனி லேப் அமைத்து உயர்ரக கஞ்சா வளர்த்து விற்பனை செய்து வந்த நபர் சிக்கியது எப்படி?
சென்னையில் உள்ள ரிசாட்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் விலை உயர்ந்த கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வடக்கு கடற்கரை உதவி ஆணையரின் தனிப்படை போலீசார் கஞ்சா கும்பலை வேட்டையாட களத்தில் இறங்கினர்.

அப்போது கஞ்சா வாங்குபவர்கள் போல் நடித்து, விற்பனை செய்யும் ரகசிய நபரை தொடர்பு கொண்டனர். குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்த அந்த நபரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் மாடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து மொத்த விற்பனையாக வாங்கி விற்று வருவதாக பிடிபட்டவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அடுக்குமாடிக்குடியிருப்பை சுற்றி வளைத்த போலீசார், குடியிருப்பில் பதுங்கியிருந்த சக்திவேல், ஷ்யாம் சுந்தர், ஸ்ரீகாந்த் மற்றும் நரேந்திரகுமார் ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். வீட்டில் சோதனையிட்ட போது போலீசார் அதிர்ந்து போயினர்.

உயர் ரக கஞ்சா செடிகளை கொடைக்கானல் கிளைமேட்டில் 24 மணி நேர ஏசி கூலிங்கில் வளர்த்து வந்ததைக் கண்டுபிடித்தனர். இதுகுறித்து பிடிபட்டவர்களிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. பிடிபட்டவர்களில் முக்கிய நபரான சக்திவேல் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தான் சம்பாதித்த பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி டிரேடிங் செய்து வந்தார். அதில் நஷ்டம் அடைந்ததால் இழந்த பணத்தை திரும்பப் பெற குறுக்கு வழியில் பணம் சம்பதிக்க திட்டமிட்டுள்ளார்.

உயர் ரக கஞ்சாவை வீட்டிலேயே வளர்த்து விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனத் திட்டமிட்டவர், இதுகுறித்து யூடியூப்பில் பார்த்து தெரிந்து கொண்டுள்ளார். பின் கிரிப்டோ கரன்சி மூலமாக வெளிநாடுகளில் இருந்து உயர்ரக கஞ்சா விதைகளையும், அவற்றை வளர்ப்பதற்கான உபகரணங்களையும் வாங்கியுள்ளார்.

இதற்காக தனது அடுக்குமாடி வீட்டில் நவீன கட்டமைப்புகளுடன் கூடிய ஆய்வகத்தையே உருவாக்கியுள்ளார். சூரிய ஒளி படாமல் கொடைக்கானல் கிளைமேட்டில் வளர்க்க வேண்டும் என்பதற்காக எல்.இ.டி. விளக்குகள் அமைத்து செடிகளுக்கு 24 மணி நேரம் ஏசி கூலிங்கை பயன்படுத்தியுள்ளார்.

செடிகளுக்கு தண்ணீர் வழங்க தானியங்கி மோட்டார்களை பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் 10க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை 4 அடி உயரத்திற்கு வளர்த்துள்ளார். கஞ்சா செடியின் வாசனை பக்கத்து வீடுகளுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு யுக்திகளையும் கையாண்டுள்ளார். செடியிலிருந்து கிடைத்த இழைகளை சிலிக்கான் பைகளில் அடைத்து நவீன முறையில் பதப்படுத்தி சிறு சிறு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

மேலும், மதுபான பார்கள் மற்றும் மதுபான விடுதிகள் உள்ளிட்டோருக்கும் சப்ளை செய்துள்ளார். அதுமட்டுமின்றி போதை ஸ்டாம்புகளையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார் சக்திவேல். ஆன்லைன் விற்பனைக்கு ரயில்வேயில் வேலை செய்து வந்த ஷ்யாம் சுந்தர், நரேந்திரகுமார் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் உதவியை நாடியுள்ளார் சக்திவேல்.

ஆன்லைன் மூலமாக 1 கிராம் கஞ்சாவை ஆயிரம் ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்று வந்துள்ளார். இதேபோல் போதை ஸ்டாம்பை 300 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். கடந்த 4 வருடமாக பக்கத்து வீட்டினருக்குக் கூடத் தெரியாமல் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள், 356 போதை ஸ்டாம்புகள் மற்றும் 3 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களது நெட்வொர்க் எந்த அளவுக்கு விரிவாக செயல்பட்டு வந்துள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.