கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட் விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா கடத்தல் அதிகரிப்பு
கோவை நகரில் ஏராளமான கல்லூரிகள் உள்ளதால் மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா கடத்தல் ஆசாமிகளை கைது செய்தாலும், முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
கஞ்சாவை நேரடியாக விற்றால் பிடிபடுவதாக கருதும் கடத்தல் ஆசாமிகள், கஞ்சாவை சாக்லெட் வடிவில் விற்பனை செய்து வருகிறார்கள்.
டீக்கடைகளில் இதனை நைசாக கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கும் ஒரு சாக்லெட் ரூ.100&க்கு விற்கிறார்கள்.
இந்தநிலையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக காவல் துறை தகவல் கிடைத்தது. உதவி கமிஷனர்கள் மணிகண்டன், தலைமை தனிப்படையினர் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கஞ்சா சாக்லெட்டுகளை விற்பதற்காக கடத்திச்சென்ற சேத்தன்(வயது30) என்ற ராஜஸ்தான் மாநில வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது.
சேத்தன் கோவை ரெங்கே கவுடர் வீதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கோவில்பாளையம் பகுதியில் எலெக்டிரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக
கஞ்சா சாக்லெட் விற்பனையில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கஞ்சா சாக்லெட்டை தின்பவர்கள் போதையால் பாதிக்கப்படுவதுடன், சிறுநீரக கோளாறு, கல்லீரல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
கோவையில் கஞ்சா சாக்லெட் விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த சோதனையை மேலும் தீவிரப்படுத்த காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply