நிறுத்தி இருந்த லாரி மோதி சிறுவன் பலி : சிறுமி காயம்- தப்பியோடிய தண்ணீர் லாரி டிரைவர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை நீலிபாளையம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 36). டிரைவர். இவரது 3 வயது மகன்
ரித்திஷ்.

இந்த நிலையில் நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில்
திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்காக கோவிலை தூய்மைப்படுத்துவதற்காக
தண்ணீர் லாரி அங்கு வரவழைக்கப்பட்டது. லாரி கோவிலை வந்தடைந்ததும் முன் பின் நகராமல் இருக்க சக்கரங்களுக்கு கற்களை எதுவும் வைக்காமல் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் கருணாகரன் என்பவர் சென்றார். அப்போது அங்கு ரோட்டோரத்தில் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
லாரி தண்ணீர் மூலம் கோவிலில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றுக்
கொண்டிருந்தது. இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் லாரி
திடீரென எதிர்பாராத விதமாக தானாகவே நகர்ந்து முன்னோக்கி சென்றது.
அப்போது ரோட்டோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரித்தீஸ் மீது
லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் ரித்தீஸ் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக இறந்தார். சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த தீபாஸ்ரீ (15)
என்ற சிறுமி காயம் அடைந்தார்.மற்ற சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்
தப்பினார்கள். இதைகண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்து சிறுவன் ரித்திசின் உடலைக் மீட்டு பிரேத
பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இந்த தகவலை அறிந்ததும் லாரி டிரைவர் கருணாகரன் அங்கிருந்து தப்பி
சென்றார். இதையடுத்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை
ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியில் பதுங்கி
இருந்த கருணாகரனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.