கோவையில் விநாயகர் சிலைகள் இ -பீட் மூலம் கண்காணிப்பு – போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி..!

கோவை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய கோவை மாநகர காவல் துறை சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது .நேற்று கமிஷனர் அலுவலக கருத்தரங்க கட்டிடத்தில் இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் சண்முகம் ,சந்தீஷ் உதவி போலீஸ் கமிஷனர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறினார்கள். இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கடந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த ஆண்டும் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை இ-பீட் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலைகள் வைக்கப்படும் இடங்கள் குறித்து விவரம் காவலன் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். விநாயகர் சிலை பகுதிக்கு இரவு ரோந்து செல்லும் போலீசார் தங்களது காவலன் செயலி மூலம் அந்த இடத்திற்கு சென்றதற்கான விபரத்தை பதிவு செய்வார்கள் .இது மூலம் மாநகரில் எத்தனை இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது? எத்தனை மணிக்கு போலீசார் அங்கு ரோந்து சென்றனர்  என்பது உள்ளிட்ட விவரங்கள் உடனுக்குடன் பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்..