கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி – பதக்கங்களை குவிக்கும் தமிழ்நாடு.!!

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் 5-வது நாளான நேற்றும் தமிழக வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றனர்.

மேலக் கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற டிராக் சைக்கிள் பந்தயத்தில் மகளிருக்கான 2 கிலோ மீட்டர் பிரிவில் தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.பி.தன்யதா தங்கப் பதக்கம் வென்றார். அவர், பந்தய தூரத்தை 2:52.333 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். மகாராஷ்டிராவின் ஷியா லால்வானி (2:54.530) வெள்ளிப் பதக்கமும், ராஜஸ்தானின் கார்கி பிஷ்னோய் (2:56.396) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

மகளிருக்கான ஸ்பிரின்ட் ஜூனியர் பிரிவில் ராஜஸ்தானின் விம்லா மச்ரா (0:14.099) தங்கப் பதக்கமும், தமிழகதின் மதி (0:14.271) வெள்ளிப் பதக்கமும், மணிப்பூரின் ஹெய்ஸ்னம் பிரமிகா சானு (0:14.267) வெண்கலப் பதக்கமும் வென்றனர். மகளிருக்கான ஸ்கிராட்ச் பிரிவில் தமிழகத்தின் ஆர்.தமிழரசி (10:10.625) தங்கப் பதக்கம் வென்றார். மகாராஷ்டிராவின் ஷியா லால்வானி (10:10.713) வெள்ளிப் பதக்கமும், தமிழகத்தின் தன்யதா (10:10,758) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள நேரு பார்க் ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்ற மகளிருக்கான இறுதிப்போட்டியில் தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி 3-2 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிரா வீராங்கனை நிருபமா துபேவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜோடியோகாவில் தமிழகத்தின் பி.மோனிஷ் மஹேந்திரன். எஸ்.கபிலன் ஆகியோர்131.98 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். மகாராஷ்டிராவின் பிரணவ் சாஹு, யாஷ் கிரண் லகாட்ஜோடி 133.23 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், அதே மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் பிபிஷன் கரட், தன்மே சந்தீப் மஹலஸ்கர் ஜோ 132.42 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றது.

மகளிருக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜோடிபிரிவில் தமிழகத்தின் மேனகா, பெட்ராஷிவானி ஜோடி 132.35 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றது. மகாராஷ்டிரா ஜோடி 132.22 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், மத்தியபிரதேச ஜோடி 132.07 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் தமிழகத்தின் வீராஜ் கிரீஷ்ராம்தாஸ், வைஷ்ணவி கிரீஷ் ராம்தாஸ்ஜோடி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஹரியானா ஜோடி தங்கமும், ராஜஸ்தான் அணி வெள்ளியும் வென்றன. ஜூடோவில் ஆடவருக்கான 81 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தின் ஹேமந்த் சச்சின் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

தடகளத்தில் ஆடவருக்கான போல்வால்ட்டில் தமிழக வீரர் கவின் ராஜா 4.30 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். உத்தர பிரதேசத்தின் ஆர்ய தேவ் 4.40 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கமும், மத்திய பிரதேசத்தின் அமன் சிங் 4.40 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் விஷ்ணு பந்தய தூரத்தை 13.77 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மகாராஷ்டிராவின் சந்தீப் கோந்த் (13.89) வெள்ளிப் பதக்கமும், கேரளாவின் கிரண் (14.14) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.