கோவை விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் – பெங்களூருக்கு சரக்கு விமான சேவை சோதனை ஓட்டம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தினமும் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

ஓடுதள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் காரணத்தால் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் விமான சேவை வழங்கப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் சரக்கு போக்குவரத்தும் கையாளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் கோவையில் இருந்து ஐதராபாத் மற்றும் பெங்களூருவுக்கு பிரத்யேக சரக்கு விமான சேவை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல பன்னாட்டு தொழில் நிறுவனம் சமீபத்தில் பிரத்யேக சரக்கு விமான போக்குவரத்தை இந்தியாவில் தொடங்கி உள்ளது. டெல்லி, பெங்களூர், ஐதராபாத், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு பிரத்யேக சரக்கு விமான சேவையை தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக கோவையில் கடந்த மாத இறுதியில் கோவை – ஐதராபாத், கோவை – பெங்களூர் நகரங்களுக்கு இடையே சரக்கு விமான சேவை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக செலவாகும் எரிபொருளின் அளவு, சரக்குகள் கையாளும் திறன், நேர மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.

கோவையில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல இரு பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் சேமிப்பு குடோன்கள் செயல்படுகின்றன.
சாலை வழியாக பொருட்களை கொண்டு வருவதில் ஏற்படும் காலதாமதத்தை சரக்கு விமான சேவை குறைக்கும். சோதனை ஓட்டம் முடிந்துள்ள நிலையில் சரக்கு விமான சேவையை கோவையில் தொடர்ந்து செயல்படுத்த அந்த நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.