அரசு வேலை வாங்கி தருகிறேன் மருத்துவர் என கூறி மோசடி: பெண் உட்பட இருவருக்கு வலை…

அரசு வேலை வாங்கி தருகிறேன் மருத்துவர் என கூறி மோசடி: பெண் உட்பட இருவருக்கு வலை…

அரசு வேலை வாங்கித் தருவதாக, பட்டதாரியிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானைச் சேர்ந்தவர் முருகன், 25 பி.இ., படித்தவர். இவரது சகோதரர் வெள்ளைபாண்டி பி.சி.ஏ., பட்டதாரி. சகோதரர்கள் இருவரும், தற்போது கோவை மாவட்டம், சூலுாரில் வசிக்கின்றனர். அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில், அவர்களது நண்பரான சூலுாரைச் சேர்ந்த பிரதீப் என்பவருக்கு தெரியும்.

இருவரிடமும், ‘எனக்குத் தெரிந்த பெண், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். அவரிடம் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவார்’ என பிரதீப் கூறியுள்ளார்.பிரதீப் அறிமுகப்படுத்திய கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த கருணாகரன் மனைவி தன்யா 39, சிங்காநல்லுாரில் வசித்து வந்தார். முருகனுக்கு கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஹெச்.ஆர்., பணியும், அவரது தம்பிக்கு கிளர்க் பணியும் வாங்கித் தருவதாக தன்யா உறுதி கூறினார். இதையடுத்து, மூன்று தவணைகளில், 15 லட்சம் ரூபாயை முருகன் கொடுத்தார்.

ஆனால், வேலை வாங்கி தரவில்லை. ஒரு கட்டத்தில், தான் ஏமாற்றப்படுவதை அறிந்த முருகன், ‘பணத்தை திருப்பிக் கொடுங்கள்’ எனக் கேட்டதும், ‘பணம் தர முடியாது. எங்கு வேண்டுமானாலும் புகார் சொல்லுங்கள்’ எனக் கூறி விட்டார். அதிர்ச்சியடைந்த முருகன், இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். அங்கு தன்யா என்ற பெயரில் மருத்துவர் யாரும் பணியில் இல்லை என்பது தெரிந்தது. அதன் பிறகே, தன்யாவும், பிரதீப்பும் திட்டமிட்டு ஏமாற்றி பணம் பறித்ததை முருகன் உணர்ந்தார். அவர் கொடுத்த புகார்படி, தன்யா, பிரதீப் இருவரையும் சிங்காநல்லுார் போலீசார் தேடி வருகின்றனர்.