கோவை போத்தனூர் அருகே உள்ள சக்தி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் காமிலா பானு (வயது 34). வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
வெள்ளலூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சலீம்(49).பெயிண்டரான இவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காமிலா பானுவுக்கு சலீமுடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்ததாகவும், இதனை சலீம் தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் காமிலா பானு, சலீமுடன் பேசுவதை தவிர்த்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சலீம், பெண்ணுடன் ஜாலியாக இருந்த புகைப்படங்களை காட்டி பணம் பறிக்க திட்டமிட்டார். உடனடியாக அவர் கரும்பு கடைக்கு சென்று, பெண்ணின் அக்காவை சந்தித்து, தங்களுக்குள்ளான உறவு குறித்து கூறியதுடன், வீடியோக்களையும் காண்பித்தார். மேலும் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் லட்ச கணக்கில் பணம் வேண்டும் என கேட்டு விட்டு அங்கிருந்து சென்றார்.
இதை கேட்டு அதிர்ச்சியான அவர் தனது தங்கையை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கேட்டார். அவர் பேசி கொண்டிருந்த போது செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
தனது கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானம் என நினைத்த இளம்பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியான அவரது உறவினர்கள் சம்பவம் குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது காமிலா பானுவின் உறவினர்கள், சலீம் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக பணம் கேட்டு மிரட்டியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். எனவே அவரது சாவுக்கு காரணமான சலீம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட காமிலா பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போத்தனூர் போலீசார் கள்ளக்காதலன் சலீம் மீது தற்கொலைக்கு துண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் கள்ளக்காதலி தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என சலீமுக்கு பயம் ஏற்பட்டது. இதனால் சலீமும் தற்கொலை செய்ய முடிவு செய்து ஆசிட்டை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சலீம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்தும் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply