பேச்சு வார்த்தை தோல்வி: கோவையில் 3-வது நாளாக தொடரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!

கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 412 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் 721 ரூபாய் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி காலை கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் தனியார் நிறுவன அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நேற்று இரவும் விடிய, விடிய தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். கொட்டும் பனியிலும் இந்த போராட்டமானது தொடர்ந்தது. அப்போது அங்கு இருந்த பெண் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் பணியாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

3-வது நாளாக தொடரும் இந்த போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் பெரும்பாலான தூய்மை பணிகள் உள்பட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறும்போது, எங்களுக்கு நாள் ஒன்றுக்கு 412 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தோம். இதையடுத்து 721 ரூபாய் தினக்கூலி வழங்குவதாக கலெக்டர் அறிவித்தார். 2 மாதங்களாகியும் உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை உடனே வழங்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர்.