ஊட்டி அருகே காட்டுத்தீ – 3 மணி நேர போராடி தீயை அணைத்த வனத்துறையினர்..!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த கடும் உறை பனிப்பொழிவு மற்றும் பகல் நேரத்தில் நிலவி வரும் வெயிலின் காரணமாக வனப் பகுதிகளில் செடி, கொடிகள் முற்றிலும் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஊட்டி, கூடலூா், குன்னூா் உள்ளிட்ட வனப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு வருவதால் இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினா், தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் ஊட்டி அருகே மந்தாடா பகுதியில் மலை ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ள வனத்தில் வெயிலின் காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீ அருகில் இருந்த செடி, கொடிகள் மீது பரவியது. இதில் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் இருந்த செடி, கொடிகள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஊட்டி தீயணைப்புத் துறையினா் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். வனப்பகுதியில் காட்டுத் தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் வந்தது.