குழந்தைகளுக்கு 3-வது தவணை போலியோ தடுப்பூசி செலுத்தும் திட்டம்- இன்று முதல் தொடக்கம்..!

கோவை: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பிறந்தது முதல் 5 வயது வரை பல்வேறு வகையான தடுப்பூசி திட்டம் தமிழக சுகாதாரத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்று போலியோ தடுப்பூசி. இந்த தடுப்பூசி தற்போது குழந்தை பிறந்த 6 மற்றும் 13 -வது வாரங்களில் 2 தவணைகளாக செலுத்தப்படுகிறது. இந்நிலையில் மேலும் ஒரு தவணை போலியோ தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்று (4-ந் தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது: –
குழந்தைகளிடையே போலியோ பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை போலியோ சொட்டு மருந்து வாய் வழியாக அளிக்கப்படுகிறது. மேலும் ஊசி மூலமாக போலியோ தடுப்பூசி 2 தவணைகளில் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 3-வது தவணை போலியோ தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.முதல் தவணை 6-வது வாரத்திலும், 2-வது தவணை 13 -வது வாரத்திலும் செலுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 3-வது தவணை போலியோ தடுப்பூசி 9 முதல் 12 மாதங்களுக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வாரம்தோறும் புதன்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறும். குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல் தொடங்குகிறது. எனவே 9 முதல் 12 மாதங்களுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் 3-வது தவணை போலியோ தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.