கோவை தொழில் அதிபரின் செல்போன் எண்ணை முடக்கி ரூ.13.50 லட்சம் நூதன மோசடி..!

கோவை சிங்காநல்லூர் வசந்தா நகரை சேர்ந்தவர் நித்யானந்தன் (51), தொழில் அதிபர். இவர் தனது செல்போன் எண்ணில் இரண்டு வங்கி கணக்குகளை இணைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 31ந் தேதி அவரது செல்போன் எண் திடீரென முடக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு செல்போன் சேவை மீண்டும் கிடைத்தது. அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.13.50 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. மர்ம நபர் அவரது செல்போன் எண்ணை முடக்கி ஆர்.டி.ஜி.எஸ் டிரான்ஸ்பர் மூலமாக பணத்தை எடுத்து நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த நித்யானந்தன் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் எண்ணை முடக்கி அவரது வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் மோசடி நடந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.