குனோ தேசிய பூங்காவில் பெண் சிவிங்கிப் புலி உயிரிழப்பு- இது மூன்றாவது இறப்பு..!

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ‘தக்ஷா’ என்ற பெண் சிவிங்கிப் புலி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
குனோ தேசிய பூங்காவில் கடந்த 42 நாள்களில் உயிரிழந்த 3-ஆவது சிவிங்கிப் புலி இதுவாகும். இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து கடந்த செப்டம்பரில் 5 பெண், 3 ஆண் சிவிங்கிப் புலிகள் என மொத்தம் 8 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன. அவை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில், பிரதமா் மோடியால் திறந்துவிடப்பட்டன. அடுத்தகட்டமாக, தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டு, குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன.

இதில், தக்ஷா என பெயரிடப்பட்ட பெண் சிவிங்கிப் புலி, காயமடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இறந்துவிட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘இனச்சோக்கைக்காக, இரு ஆண் சிவிங்கிப் புலிகளின் வாழ்விடத்தில் ‘தக்ஷா’ பெண் சிவிங்கிப் புலி திறந்துவிடப்பட்டது; அப்போது, அவற்றுக்குள் மோதல் ஏற்பட்டு, ‘தக்ஷா’ காயமுற்றதாக  தெரிகிறது’ என்றாா் அந்த அதிகாரி. முன்னதாக, கடந்த மாா்ச் 27-இல் ‘சாஷா’ என்ற பெண் சிவிங்கிப் புலியும் , ஏப்ரல் 23-இல் ‘உதய்’ என்ற ஆண் சிவிங்கிப் புலியும் உயிரிழந்திருந்தன. இதில், ‘சாஷா’ நமீபியாவில் இருந்தும், ‘உதய்’ தென்னாப்பிரிக்காவில் இருந்தும் கொண்டுவரப்பட்டவையாகும்.