டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது..!

சென்னை: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு சாலைமறியிலில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் ரயில் நிலையத்துக்குள் நுழைந்தனர்.

அங்கு மதுரைக்கு செல்ல தயாராக இருந்த வைகை விரைவு ரயில் முன்பு நின்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி கைது செய்து திருவல்லிக்கேணி சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர்.

முன்னதாக போராட்டம் குறித்து பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் பெற்ற வேளாண் கடனை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும்.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் டெல்லி விவசாயிகளை சுட்டுக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.

மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்தை தமிழக அரசு ஏன் ஒடுக்க நினைக்கிறது. எங்களுக்கு பிரதமர் மோடி எதிரியல்ல. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதும், விவசாயிகளை சுட்டுக் கொள்வதையும் தான் எதிர்க்கிறோம். இந்த நியாயத்தை முதல்வரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்