கோவையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது..!

கோவை கெம்பட்டி காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில், தனிப்படை போலீசார் அவ்வப் போது ரோந்து சென்று கஞ்சா, போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவற்றை விற்கும் கும்பல் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை பெரியகடை வீதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள கீரை தோட்டம் பகுதியில் போலீசார் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் பெயர் கார்த்திக் என்பதும், அவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, அடி தடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலம், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்த போலீசார், கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.