போலி டாக்டர் பட்டம்… கைதான மைவி – 3 நிர்வாக இயக்குனரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு.!!

கோவை : மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் விஜயராகவன் ( வயது 48) இவர் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்ட மைவி – 3 என்ற தனியார் நிறுவனத்திற்கு ஹெர்பல் மற்றும் உணவுப் பொருட்கள் சப்ளை செய்வற்காக கோவை அன்னூர் புதுச்சேரியில் ” சித்வா ஹெர்பல் அண்டு புட்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ” மைவி 3 ” நிறுவனத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் ஆன்லைன் மூலம் முதலீடு செய்திருந்தனர். இந்த நிறுவனத்தின் மீது மோசடி புகார் எழுந்தது. இதையடுத்து அதன் நிர்வாக இயக்குனரான கோவை வெள்ளக் கிணறு பகுதியைச் சேர்ந்த சக்தி ஆனந்தன் (வயது 43) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை போலீசார் கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரித்த போது விஜயராகவன் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விஜயராகவன் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்கை மருத்துவத்துறையில் பி .எச் .டி .டாக்டர் பட்டம் பெற்றதாக தெரிகிறது. உடனே போலீசார் அந்த முனைவர் பட்டத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு மெயில் கடிதம் மூலம் அனுப்பி பரிசோதித்தனர். இதையடுத்து அது போலியாக தயாரிக்கப்பட்ட டாக்டர் பட்டம் என்பது தெரியவந்தது. மேலும் அவர் தனது பெயரில் உரிமம் பெற்று மக்களை நம்ப வைத்து தனது நிறுவனம் மூலம் ஆயுர்வேத மாத்திரைகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை தயாரித்ததும், அது குறித்து பொதுமக்களுக்கு ஆன்லைனில் தகவல் தெரிவித்து விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது .

இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விஜயராகவன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரையில் பதுங்கி இருந்த விஜயராகவனை கடந்து 2 – ந் தேதி மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் கோவையில் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ( எண் 7) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து போலி டாக்டர் பட்டம் ,ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் .

இதேபோல மைவி-3 நிறுவன இயக்குனர்களில் ஒருவரான கோவை தடாகத்தைச் சேர்ந்த ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே கைதான விஜயராகவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதில் மொத்தம் எத்தனை பேரிடம் பண முதலீடாக பெறப்பட்டுள்ளது. அதன் மதிப்பு எவ்வளவு ?இதில் தொடர்பு உடையவர்கள் யார்? யார்? என பல்வேறு கோணங்களில் விசாரிக்க இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே கைதான விஜயராகவன் அன்னூர் மற்றும் புதுச்சேரியில் ஹெர்பல் நிறுவனத்திலும் அங்கு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மருத்துவ பொருட்களின் தரம் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மைவி – 3 நிறுவன உரிமையாளர் இயக்குனர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையிலும், அந்த நிறுவனத்தின் செல்போன் செயலி இன்னும் செயல்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த நிறுவனத்தில் மேலும் பலரும் தொடர்ந்து ஆர்வத்துடன் முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. அது போல நிறுவனத்தின் சார்பில் முதலீட்டாளர்கள் பலருக்கு பணம் திரும்ப செலுத்தப்பட்டு வருவதாக வும் தெரிகிறது. இதனால் தான் இந்த நிறுவனம் குறித்து முதலீட்டாளர்கள் யாருமே கோவை மாநகர குற்ற பிரிவு போலீசில் புகார் அளிக்க முன் வரவில்லை.