ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை நீதிமன்றத்தில் 2 வாரத்தில் தாக்கல்- மர்மங்கள் உடையுமா..?

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை 2 வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கை சிபிசிஐடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், சந்தேக வளையத்துக்குள் சிக்கிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.

அதன்படி, சென்னை மெரினா சாலையில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி முதல் உண்மைகண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ராமஜெயம் கொலை தொடர்பாக 12 பேரிடமும் தலா 12 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டன. விசாரணை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோதனை தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிக்கையாக தயாரிக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அறிக்கையை அவர்கள் விரைவில் சிபிசிஐடி பிரிவு போலீஸாரிடம் வழங்குவார்கள். அந்த அறிக்கை 2 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.