கோவை தொழில் அதிபரிடம் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம், நிறுவனம் அபகரிப்பு – தாய்,மகள்,மருமகன் கைது.!!

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 50) தொழில் அதிபர். இவருக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் இவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை விற்றது தொடர்பாக வருமானவரித்துறை ரூ.5 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதனை சரி செய்வதாக கூறி சேலத்தைச் சேர்ந்த அஸ்வின் (வயது 57) என்பவர் ரூ 10 கோடி மற்றும் கோடிக்கணக்கான நிலத்தை மோசடி செய்து விட்டார் .இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே அஸ்வின் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் வசந்த், சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தொழில் அதிபர் சிவராஜூக்கு சொந்தமான மற்றொரு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் அவரது பாட்டி பிரேமா, தாய் சித்ரா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர். மோசடி ஆசாமியான அஸ்வின் இந்த நிறுவனத்திலும் புகுந்து மோசடி செய்துள்ளார். அதன்படி சிவராஜ்க்கு சொந்தமான பங்குகளை இவரது பெயருக்கு மாற்றியும், பிரேமா, சித்ரா ஆகியோர் இந்த நிறுவனத்தில் இருந்து விலகி கொள்வதாக போலி ஆவணங்கள் தயாரித்தும் ரூ.15 கோடி மதிப்புள்ள இந்த நிறுவனத்தை அஸ்வின் அபகரித்து மோசடி செய்துள்ளார். இந்த மோசடிக்கு அஸ்வினுடன் சேர்ந்து அவரது மனைவி ஷீலா ( வயது 52) மகள் தீட்சா ( வயது 29) மருமகன் சக்தி சுந்தர் ( வயது 34) உட்பட 7 பேர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மாநகர குற்றப்பிரிவு போலீசார் அஸ்வின் உட்பட 7 பேர் மீது கூட்டு சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர் .இந்த நிலையில் அஸ்வினின் மனைவி ஷீலா மகள் தீட்சா, மருமகன் சக்தி சுந்தர் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் . அஸ்வின் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்..