இன்னுமா முடியல… ஆதரவாளருக்கு கேபினட்டில் ‘நோ’ சொன்ன முதல்வர்.. சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே வலுக்கும் பனிப்போர் .!!

பெங்களூர் : கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், டிகே சிவக்குமார், தனது ஆதரவாளரான எம்.எல்.சி ஹரிபிரசாத்துக்கு கேபினட்டில் டிக்கெட் வாங்கித்தர முயற்சித்தார்.

ஆனால், சித்தராமையா அதனை ஏற்காத நிலையில் டிகேஎஸ் – சிவக்குமார் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

கர்நாடகாவில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். 8 அமைச்சர்கள் ஏற்கனவே பதவியேற்ற நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில் இன்று பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.

இதையடுத்து கடந்த மே 20ஆம் தேதி, சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. முதலமைச்சராக சித்தராமைய்யா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றனர். மேலும், 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லிக்குச் சென்று மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி 24 பேர் கொண்ட அமைச்சரவையின் அடுத்த பட்டியல் இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் 24 பேர், இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

கேபினட் விரிவாக்கத்திலும் சித்தராமையாவின் கையே ஓங்கி இருப்பதாகத் தெரிகிறது. தனது ஆதரவாளர்களுக்கு அதிக அமைச்சர் பதவிகளை பெற்றுத் தர முடியாததால் டிகே சிவக்குமார் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் பதவி விவகாரத்தில் இழுபறி நீடித்த நிலையில், இப்போதும் சித்தராமையா கை ஓங்கியிருப்பதால் டிகேஎஸ் தரப்பு அப்செட்டில் உள்ளதாம்.

தனது ஆதரவாளரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான எம்.எல்.சி ஹரிபிரசாத்தை அமைச்சராக விரும்பியுள்ளார் டிகே சிவக்குமார். ஆனால், முதல்வர் சித்தராமையா அதனை ஏற்காததால் அமைச்சரவை லிஸ்ட்டில் ஹரிபிரசாத் இடம்பெறவில்லை. இதனை முன்வைத்து சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் இடையே பூசல் ஏற்பட்டுள்ளதாம்.

ஹரிபிரசாத்தை அமைச்சராக சேர்ப்பது சட்ட மேலவைக்கும், பிற்படுத்தப்பட்ட சாதியான எடிகா சமூகத்திற்கும் பிரதிநிதித்துவத்தை அளிக்கும் என்று வலியுறுத்தியுள்ளார் டிகே சிவக்குமார். ஆனால், ஹரிபிரசாத் அமைச்சரானால், டிகே சிவக்குமார் முதலமைச்சர் பதவியை பெறுவதற்கு உதவுவார் என சித்தராமையா கருதுவதால் அவருக்கு டிக் அடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக அரசியலில் இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் ஹரிபிரசாத் இதுவரை அமைச்சர் பதவியை வகித்ததில்லை. சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பொறுப்பாளராக இருந்த ஹரிபிரசாத் தான், அஜித் ஜோகியைக் கட்டுப்படுத்தவும், மாற்றுத் தலைமையை வளர்க்கவும் காங்கிரஸுக்கு உதவினார்.

கட்சிக்காக நீண்ட காலம் பணியாற்றிய ஹரிபிரசாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காக பல தியாகங்களைச் செய்துள்ள ஹரிபிரசாத்தை தலைமை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், சித்தராமையாவோ, எம்.எல்.சியான போசராஜுக்கு கேபினட்டில் இடம் கொடுத்துள்ளார். போசராஜுக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கப்படாததால், அவருக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக சித்தராமையா கூறுகிறாராம்.

அதேபோல, ஹரிபிரசாத் சார்ந்த எடிகா சமூகத்தைச் சேர்ந்த மது பங்காரப்பாவை அமைச்சரவையில் சேர்த்து அந்த சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் கொடுத்துள்ளார் சித்தராமையா. டிகேஎஸ், ஹரிபிரசாத்தை அமைச்சர் ஆக்க முயன்று தோல்வியடைந்துள்ளதால் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே மோதல் போக்கு வலுத்துள்ளதாக கூறப்படுகிறது.