ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளுக்காக கோவை குளங்களில் வல்லுநர் குழு ஆய்வு

கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.1500 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி. மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், வ.உ.சி. பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் குளக்கரைகளை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.48 கோடிக்கு வாலாங்குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. வாலாங்குளம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதிகளை தீவிர மற்ற இடங்களில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

கோவை வாலாங்குளம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் நடைபயிற்சி பாதை, உணவு விடுதி, பார்வையாளர் அரங்கு, உடற்பயிற்சி கூடம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இப்பணிகள் தொடர்பாக டெல்லியில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு கோவை வாலாங்குளம் மற்றும் பெரியகுளத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரைகளில் நடைபெறும் பணிகள் தொடர்பாக தொழில்நுட்ப வல்லுநர் குழுவினருடன் பல முறை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மீண்டும் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்,’’ என்றார்.