தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக் கழகத்தில்‌ பார்த்தீனியம் குறித்த விழிப்புணர்வு வார‌ம் – மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்பு..!

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக் கழகத்தில்‌ பார்த்தீனியம் குறித்த விழிப்புணர்வு வார‌ம் – மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்பு

பார்த்தீனியம் என்பது ஒரு நச்சு களை செடியாகும். இந்த களைச் செடியானது, உலகம் முழுவதுமாக பரவி பல விதமான தீங்கினை மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மற்றும் வேளாண்மை சாகுபடிக்கும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த பார்த்தீனிய செடி ஒவ்வொன்றும் சுமார் 10,000 முதல் 25,000 விதைகளை உருவாக்குவதால் ஒரு சதுர மீட்டரில் 1,54,000 பார்த்தீனிய விதைகள் மண்ணில் காணப்படுகின்றன. மேலும், இவ்விதைகள் எளிதாக காற்றின் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதால் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது.

பார்த்தீனியத்தைப் பற்றியும் அதன் நச்சுத் தன்மைகளைப் பற்றியும் வேளாண் மாணவர்கள், உழவர் பெருமக்கள், பண்ணைப் பணியாளர்கள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் பொது மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 16 முதல் 22 ஆம் தேதி வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு வேளாண் பல்கழைக்கழகத்தின் உழவியல் துறை சார்பில் பார்த்தீனிய விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது.

நடப்பாண்டில் பார்த்தீனிய விழிப்புணர்வு வாரத்தின் முதல் நிகழ்ச்சியாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பார்த்தீனியம் பற்றிய கட்டுரைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பாரத்தீனியச் செடி, அதன் தீமைகள் மற்றும் மேலாண்மை முறைகள் பற்றி முனைவர். ப. முரளி அத்தனாரி, இணைப் பேராசிரியர் (உழவியல்) எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பல மாணவர்கள் பங்கு பெற்று பார்த்தீனிய செடி பற்றி அவர்களுடைய சொந்த கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக உறுதி எடுத்துக்கொண்டனர்.

அடுத்த நிகழ்ச்சியாக, இளங்கலை மாணவர்களுக்கு பார்த்தீனியம் பற்றிய விநாடி வினா போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தொண்டாமுத்தூர் பகுதியில் வேளாண் பெருமக்களிடம் இந்த களைத் தாவரங்கள் பற்றி எடுத்துரைத்து பார்த்தீனியம் அதிகமுள்ள இடங்களில் மெக்சிகன் வண்டுகளை விட்டனர்.

மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் களை மேலாண்மை பிரிவு, உழவியல் துறை ஏற்பாடு செய்திருந்த செயல் விளக்கத்தை பண்ணைத் தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு பார்வைக்கு வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, முனைவர் ச. பன்னீர்செல்வம், பேராசிரியர் மற்றும் தலைவர், உழவியல் துறை மற்றும் முனைவர் ப. முரளி அத்தனாரி, இணைப்பேராசிரியர் அவாகள் பல்கலைக்கழகத்தில் உள்ள பண்ணை தொழிலாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து வயல்வெளிகளில் பாரத்தீனியச் செடிகளை அப்புறப்படுத்தினர். மேலும் பார்த்தீனிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நரசீபுரத்தில், ஸ்ரீரங்கநாதா பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 75க்கும் மேற்பட்ட மாணாக்கார்கள் கலந்து கொண்டு இவ்விஷச் செடியின் தீமைகள் பற்றியும் அதன் மேலாண்மைப் பற்றியும் தெரிந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

வரும் நாட்களில் அகில இந்திய களை மேலாண்மை ஆராய்ச்சித் திட்டம், உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பாக நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் மற்றும் கணினி செயலி மூலம் விவசாய பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் பார்த்தீனியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.