நேபாளத்தில் சிக்கிய எங்கள் குழுவினரின் துயரத்தில் பங்கெடுத்து கொள்கிறேன் என்றும் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
நம் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திற்கு இன்று காலை பெரும் துயரமான நாளாக மாறியுள்ளது. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஓடும் கோசி ஆற்றில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பெருவெள்ளம் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், விடுதிகள் இன்னும் பல கட்டிடங்கள், பாலங்கள் உள்ளிட்டவற்றை இருந்த இடம் தெரியாமல் அடித்து சென்றது.
இந்த பெருவெள்ளத்தில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 133 இந்தியர்களும் மாயம் ஆகியுள்ளனர். மொத்தம் 400 பேர் மாயம் ஆகியுள்ள நிலையில், 95 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் தாழ்வான பகுதிகளை நோக்கி பாய்ந்து வருவதால், நேபாளத்தின் அருகில் அமைந்துள்ள பீகாருக்கு ஹை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் நேபாள அரசுடன் இணைந்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, பெருவெள்ளம் காரணமாக நேபாளத்தில் கோவை ஈஷா யோகா மையத்தை சேர்ந்த 148 பேர் சிக்கியுள்ளதாக ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். திபெத்தில் 743 பேரும் குடிவரவு மையத்தில் 77 பேரும் இருப்பதாக ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். நேபாளத்தில் சிக்கிய எங்கள் குழுவினரின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: –
திபெத்தின் கைராங் பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளத்தில், எங்கள் கைலாஷ் யாத்திரைக் குழுவைச் சேர்ந்த ஒரு குழுவும் சிக்கியுள்ளது. வெள்ளம் ஏற்பட்டபோது குடியேற்ற அலுவலகத்தில் இருந்துள்ளனர். அந்தக் கட்டிடமும், நகரின் பெரும்பாலான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தால் நாங்கள் அனைவரும் ஆழ்ந்த வேதனையில் உள்ளோம். மீட்புப் பணிகளுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
குடியேற்ற அலுவலகத்தில் இருந்தவர்களின் தற்போதைய நிலை அல்லது எங்கு உள்ளார்கள் என்பது பற்றிய அதிகாரப்பூர்வமான எந்தத் தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை. மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் குறித்து அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறோம்.
எங்கள் யாத்திரையில் இடம்பெற்றுள்ள 21 குழுக்களில், 495 பேர் ஏற்கனவே பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனர். 743 பேர் தற்போது திபெத்திலும், 148 பேர் நேபாளத்திலும் இருக்கிறார்கள். 77 பேர் குடியேற்ற மையத்தில் இருந்துள்ளனர். 3 தன்னார்வலர்கள் நேபாளத்தின் திமுரே பகுதியில் உள்ளனர். கடினமான இந்த நேரத்தில், எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என்று பதிவிட்டுள்ளர்.
நேபாள பெருவெள்ளத்தில் கோவை ஈஷா யோகா மையத்தின் குழுவை சேர்ந்த 148 பேரும் 3 தன்னார்வர்களும் சிக்கியிருப்பதாக ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.நேபாள வெள்ளம் தொடர்பாக 80690 09901, 8069009000 – என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 1800 309 3793 என்ற இலவச உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.








