துப்புரவு பணியாளர்களுடன் சமபந்தி விருந்து – அண்ணாமலையின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்.!!

பா.ஜ.க. சார்பில் துப்புரவு பணியாளர்களை கவுரவித்து, அவர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் நடைபெற்றது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமபந்தியில் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி விருந்து சாப்பிட்டார். அவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவித்தார். இறுதியாக சேலை, வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தூய்மை இந்தியா திட்ட மாநில ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மேயருமான கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன், லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சமூகநீதி நாட்களாக, சமூக நீதி வாரங்களாக இந்தியா முழுவதும் பா.ஜ.க. கொண்டாடி வருகிறது.

அதன்படி துப்புரவு பணியாளர்களை கவுரவித்து, சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. துப்புரவு பணியாளர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.