தோண்டத் தோண்ட கிடைத்த முட்டைகள்… 8 கோடி ஆண்டுகள் ஆகியும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே…

சீனா நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள கான்சோ நகரில் உலகையே அதிர வைக்கும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.

எப்போதுமே மர்மங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் பெயர்போன சீனாவில், இம்முறை பூமிக்கு அடியில் இருந்து 8.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பொக்கிஷம் வெளிவந்துள்ளது. ஆமாம், அங்கே 30 டைனோசர் முட்டைகள் புதைபடிவங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. இது இன்று உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்களை அப்படியே உறைய வைத்துள்ளது.

கட்டுமானப் பணிகளுக்காகச் சாதாரணமாக பள்ளம் தோண்டியபோது தான் இந்த 30 டைனோசர் முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.. இந்தக் கண்டுபிடிப்பில் இருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இந்த முட்டைகள் அனைத்தும் பல கோடி ஆண்டுகளாக எரிமலைச் சாம்பலுக்கு அடியில் மிகப்பத்திரமாகப் புதைந்து கிடந்துள்ளனவாம்.

ஜியாங்சி மாகாணத்தில் ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டுவதற்காகப் பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியிருக்கிறார்கள்.. அப்போது உருண்டை உருண்டையாகப் பாறைகள் போன்ற சில பொருட்கள் தென்பட்டுள்ளன. ஏதோ விசித்திரமான பொருள் என்று நினைத்து அருகில் சென்று பார்த்தபோதுதான், அவை ஒவ்வொன்றும் டைனோசர் முட்டைகள் என்பது தெரியவந்தது.

பொதுவாக டைனோசர் முட்டைகள் சிதைந்துபோக வாய்ப்புகள் அதிகம். ஆனால், இங்கே கண்டெடுக்கப்பட்ட 30 முட்டைகளும் அப்படியே முழுமையாக இருக்கின்றன.

கான்சோ நகரம் ஏற்கனவே “டைனோசர்களின் தாயகம்” என்று அழைக்கப்படும் இடம்தான் என்றாலும், ஒரே இடத்தில் இத்தனை முட்டைகள், அதுவும் இவ்வளவு தெளிவாகக் கிடைத்தது இதுவே முதல்முறை என்கிறார்கள்.. இந்த முட்டைகள் ஒவ்வொன்றும் சுமார் 2 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட ஓடுகளைக் கொண்டுள்ளன. இது அந்த காலத்தில் வாழ்ந்த “தெரோபாட்” (Theropod) வகை டைனோசர்களுடையது என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்த செய்தி வெளியானவுடன் அந்த கட்டுமானப் பகுதி முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் அழிந்துபோன ஒரு உயிரினத்தின் வாரிசுகள் இப்போது நம் கண்ணெதிரே இருப்பது ஒருவித மலைப்பை உண்டாக்குகிறது..

அந்த 8.6 கோடி ஆண்டு காலச் சாம்பல் படலத்தை நீக்கிப் பார்த்தபோது, அந்த முட்டைகளுக்குள் இருந்த கருக்கள் (Embryos) கூட சிதையாமல் அப்படியே இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகப் புதிய ஆய்வுகள் கூறுகின்றன.

ஒருவேளை அந்த முட்டைகளில் இருந்து டைனோசர்களின் டிஎன்ஏ (DNA) எடுக்கப்பட்டால், ஹாலிவுட் படங்களில் வருவது போல மீண்டும் டைனோசர்களை உருவாக்கும் அதிசயம் நடக்குமா என்கிற விவாதம் இப்போதே தொடங்கிவிட்டது.

இப்போது அந்த முட்டைகள் அனைத்தும் பாதுகாப்பாக அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த 30 விசித்திர உருண்டைகள் சொல்லப்போகும் கதையைக் கேட்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இயற்கையின் மர்மங்கள் எப்போதும் மனிதனின் கற்பனைக்கு எட்டாதவை என்பதற்குச் சீனாவின் இந்தத் கண்டுபிடிப்பே ஒரு சாட்சி! யோசிக்க முடியாத இந்தச் சம்பவம், மனித வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது… என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!