இரட்டை இலை சின்னம் யாருக்கு..? உச்சநீதிமன்றத்தில் முறையீடு- இபிஎஸ்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!

திமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் என பிளவு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அதிமுகவில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்த நிலையில், விரைவில் தீர்ப்பானது வரவுள்ளது. எனவே இந்த தீர்ப்புக்காக இரண்டு தரப்பும் காத்துள்ளனர். இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் சார்பாக தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தவுள்ளதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை உள்ளது.

எனவே அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க வேண்டும் எனவும், ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகளை நீக்கிய பொதுக்குழு முடிவுகளையும், உயர் நீதிமன்ற தீர்ப்பையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, இடைக்கால உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது. பெரும்பாலும் இந்த வழக்கை அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை திங்கள் கிழமை மனுவை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் ஒருவேளை முன்னதாகவே அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு வழங்க முடியுமா? என்பதை பார்க்கலாம். தீர்ப்பு தாமதமாகும் பட்சத்தில் இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளுக்குள்ளாக உத்தரவுகள் வரவில்லை என்றால் முறையீடு பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.