திருச்சியில் மெமு ரயில் பராமரிப்பு முனையம்.!!

திருச்சி ரயில்வே இக்கோட்டத்தில் இயக்கப்படும் 170 விரைவு ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள், வாரந்திர ரயில்களில் மாதந்தோறும் 45 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இதன் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டில் திருச்சி கோட்டத்துக்கு முந்தைய ஆண்டின் வருவாயைவிட 15.33 சதவீதம் அதிகரித்து ரூ.372.84 கோடி கிடைத்தது. இதை மேலும் அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குறைந்த தூரத்தை விரைவாகக் கடக்கும் வகையிலான 9 டெமு ரயில்கள், மெமு ரயில்களாக மாற்றப்பட்டு, இயக்கப்படுகின்றது. ஆனால் திருச்சி கோட்டத்தில் அகல ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதிகளும், சில விரைவு ரயில்களுடைய பிஜி பெட்டிகளின் தொடக்க நிலைப் பராமரிப்பை மேற்கொள்ளும் வசதிகளும் உள்ள நிலையில், மெமு ரயில் பராமரிப்பு முனையம் இல்லை.
எனவே திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு முனையம் அமைக்கக் கோரி சில ஆண்டுகளுக்கு முன் தெற்கு ரயில்வே மூலமாக விரிவான முன்மொழிவு அனுப்பப்பட்ட நிலையில், ரயில்வே வாரியம் அதற்கு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள மஞ்சத்திடல் ரயில் நிலையப் பகுதியின் ரயில்வே நிலத்தில் மெமு ரயில் பராமரிப்பு முனையம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறிய தகவல்
தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் மெமு ரயில்களை பராமரிக்க சென்னை, பாலக்காட்டில் உள்ள பராமரிப்பு முனையங்களுக்குச் செல்ல வேண்டும். இதனால் குறிப்பிட்ட வழித்தடத்தில் ஓடும் மெமு ரயில்களை நிறுத்த வேண்டிவரும், இதனால் காலவிரயமும் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு திருச்சியில் மெமு ரயில் பராமரிப்பு முனையம் அமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அண்மையில் ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்துள்ள நிலையில், ரயில்வே கட்டுமான நிறுவனமானது, மெமு ரயில் பராமரிப்பு முனையம் அமைக்க பூர்வாங்கப் பணிகளை தொடங்கியுள்ளது. மேலும், கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கி, ஓராண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் தனியாக லோகோமோட்டிவ் மற்றும் இயந்திரப் பெட்டிகள் இல்லாத டீசல் இயந்திரங்களால் இயக்கப்பட்ட 14 டெமு ரயில்கள் ஆகும். இந்நிலையில் திருச்சி கோட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மின்மயமாக்கப்பட்டதாலும், அதீத கார்பன் உமிழ்வைத் தவிர்க்கும் விதமாகவும், மேற்கண்ட ரயில்களில் 9 வழித்தடங்களில் இயக்கப்பட்ட ரயில்கள் மின்சாரத்தில் இயங்கும் 8 பெட்டிகளைக் கொண்ட மெமு ரயில்களாக அண்மையில் மாற்றப்பட்டு, இயக்கப்படுகின்றது என தெரிவித்தார்கள்.