இரட்டை இலை கிடைக்குமா..? பரபரப்பான சூழ்நிலையில் இன்று தீர்ப்பு… எதிர்பார்ப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

ரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்றைய தினம் முக்கிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததது. அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாலர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து இடுவதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உண்மையான அதிமுக யார்? என்பது தொடர்பான அதிமுக பொதுக்குழு வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவுற்று தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என கூறப்படும் நிலையில் அதே தேதியிலேயே ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவடைவதால் ஈபிஎஸ் தரப்பு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது.

எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இன்று இம்மனு மீது விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று நடக்கும் வாதங்களும் பிறப்பிக்கப்படும் உத்தரவும் அதிமுக மட்டுமின்றி அனைத்துக் கட்சியினராலும் உற்றுநோக்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தையும் இடைக்கால பொதுச்செயலாளர் அங்கீகாரத்தையும் பெற ஈபிஎஸ் தரப்பு வாதங்களை முன் வைக்கும் அதே வேளையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை எனவே ஓபிஎஸ் தலைமையிலான தரப்புக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என வாதிட உள்ளது.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மட்டுமின்றி அதிமுகவின் எதிர்காலத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கினால் நடிகர் பாக்கியராஜ் இரட்டை சின்னத்தில் ஈரோடு கிழக்கில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈபிஎஸ் தரப்புக்கு சாதகமாக சென்றால் தென்னரசு இரட்டை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை உச்சநீதிமன்றம் முடக்கினால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடவும் ஈபிஎஸ் தரப்பு தயாராக உள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பு தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையிலேயே பாஜக உள்ளிட்ட அதிமுகவின் கூட்டணிக்கட்சிகள் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.