நீதிக்கு எதிராக யாரெல்லாம் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன் – ஓ.பி.எஸ். பேட்டி.!!

பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.,

“ராமநாதபுரம் ராஜா சேதுபதி ஆட்சிக்கு உட்பட்டது. எனவே அந்த மக்கள் நீதி மற்றும் தர்மத்தின் படி நீதி வழங்குவார்கள் என்பது கடந்த காலத்தின் வரலாறு. இந்த தொண்டர்களை மீட்கின்ற தர்மயுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நான் நீதி கேட்டு தான், நீதிக்கு உரிய தீர்ப்பை ராமநாதபுரம் மக்கள் வழங்குவார்கள் என்று எண்ணித்தான் ராமநாதபுரம் தொகுதியில் நிற்கின்றேன்.

திமுகவின் வாக்குறுதிகள் பாஜகவிற்கு எதிராக உள்ளதா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நீதிக்கு புறம்பாக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன். அதிமுக சின்னம் மற்றும் கட்சியை மீட்டெடுப்பதற்காக சட்டப்படி வழக்கு தொடரப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து அந்த வழக்கை நடத்தி நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.” இவ்வாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.