சத்தியமங்கலத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட மாநாடு – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் சத்தியமங்கலம் பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள ஆனைக்கொம்பு மண்டபத்தில் ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் திராவிட மாடல் என்ற தலைப்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சியின் நிறுவன தலைவர் அதியமானுக்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதியில் இருந்து மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் ஆனைக்கொம்பு திருமண மண்டபத்தில் மாநாடு நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் பவானிசாகர் ராஜசேகர், கோபி சதீஷ், நம்பியூர் ஒன்றிய செயலாளர் சேகர், சத்தியமங்கலம் நகர செயலாளர் பசுபதி, மகளிர் அணி ஒன்றிய செயலாளர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் குருநாதன் வரவேற்றார். பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார் தொடக்க உரை ஆற்றி மாநாட்டினை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் நிறுவன தலைவர் அதியமான், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, திமுக மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் திராவிட மாடல் என்ற தலைப்பில் பேசினர். இந்த மாநாட்டில் திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், சத்தியமங்கலம் நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான ஜானகிராமசாமி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளரும்,  ஊராட்சி ஒன்றிய குழு தலைவருமான கேசிபி இளங்கோ,  காங்கிரஸ் கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட துணைத்தலைவர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட இளைஞரணி தலைவர் வடிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் சின்னசாமி, தொழிலாளர் பேரவை மாவட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் குமுதா நன்றி கூறினார். மாநாட்டில் கலந்து கொண்ட ஆதித்தமிழர் பேரவையின் ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது..