கீழடி அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் கண்டுபிடிப்பு..!

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் நடைபெற்ற அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரைக்கு தென்கிழக்கில் சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்குப் பிறகு தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் 175 செ.மீ. ஆழத்தில் XM19/3 என்ற அகழாய்வுக் குழியிலிருந்து படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் ஒன்று வெளிக்கொணரப்பட்டுள்ளது. இவ்வெடைக்கல் சற்று கோள வடிவில், மேற்பகுதி மற்றும் அடி பகுதி தட்டையாக்கப்பட்டு, பளபளப்பான மேற்பரப்புடன் ஒளி புகும் தன்மையுடன் காணப்படுகிறது.

இக்கல் 2 செ.மீ. விட்டம், 1.5 செ.மீ. உயரம் மற்றும் 8 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த எடைக்கல்லுடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்புப் பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.