பலமுறை தோல்வியடைந்தும் நாங்கள் துவண்டு விடவில்லை – மத்திய சென்னையில் சீமான் பரப்புரை.!!

மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பலமுறை தோல்வியடைந்தும் நாங்கள் துவண்டு விடவில்லை என தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகருக்குட்பட்ட மத்திய சென்னை தொகுதியில் மக்களவை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சாரத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகே தொடங்கிய நாம் தமிழர் கட்சியின் வாகன பரப்புரையானது, பூக்கடை காவல் நிலையம், வில்லிவாக்கம், அண்ணாநகர் எம்.எம்.டி.ஏ தண்ணீர் தொட்டி, உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்தது.

முன்னதாக சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வராக எப்போது பொறுப்பேற்றுக் கொண்டாரோ அன்றில் இருந்து அநாகரீக அரசியல், ஊழல், சூழ்ச்சி அரசியல் போன்றவை தமிழகத்தில் ஆரம்பமாகிவிட்டன. அன்றில் இருந்து ஊழல், லஞ்சம் தேசியமயமாக்கப்பட்டது. ஓட்டுக்கு காசு கொடுப்பதை ஒரு வாழ்க்கை முறையாக மரபாக்கியதும் இவர்கள் தான்.

எந்த திட்டத்துக்கும் காசு இல்லை, நிதி இல்லை என்று கைவிரிக்கும் திமுக அரசு, ஓட்டுக்காக மட்டும் எப்படி செலவு செய்கிறது? இவர்களுக்கு இடையே மண்ணுக்கும், மக்களுக்குமான அரசியலை முன்வைக்கிறது நாம் தமிழர் கட்சி. நாங்கள் வாக்கை கேட்டு மக்கள் முன்வந்து நிற்கவில்லை.

வருங்கால தலைமுறை பிள்ளைகளின் வாழ்க்கையை கேட்டு வந்து நிற்கிறோம். எங்களுக்கு முதன்மையானது ஓட்டு அல்ல. நாட்டின் உரிமை, மக்களின் நலனை காக்கவே தேர்தலில் நிற்கிறோம். இவற்றை மக்கள் உணர்ந்தாலே போதுமானது. பலமுறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளோம். ஆனால் துவண்டு விடவில்லை. வாக்கு என்பது வலிமைமிக்க ஆயுதம். இதனை அநீதிக்கு எதிராக உபயோகிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை 3-வது இடத்தில் இருக்கும் நாங்கள் முதலிடத்துக்கு போவதே எங்களது இலக்கு. தேர்தலுக்கான வாக்கு இயந்திரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

நைஜீரியா, இந்தியாவை தவிர வேறு எந்த நாடுகளும் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்துவதில்லை. வளர்ச்சி பெற்ற அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இதுவரை வாக்கு சீட்டு முறையை தான் பயன்படுத்தி வருகின்றன’ என்றார்.